பதிவு செய்த நாள்
17
செப்
2018
12:09
சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப் பட்டிருந்த, 2,320 விநாயகர் சிலைகள், கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
இதில், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 680 விநாயகர் சிலைகள், பாலவாக்கம் கடலில், நேற்று கரைக்கப்பட்டன.
வடசென்னையில், எண்ணூர் - பாரதியார் நகர், திருவொற்றியூர் - பாப்புலர் எடைமேடை, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆகிய மூன்று இடங்களில், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதி நாவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டு இருந்த, விநாயகர் சிலை ஊர்வலத்தை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, முஸ்லிம்கள் துவக்கி வைத்தனர்.
சென்னையில், நேற்று மட்டும், 2,320 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலில் கரைக் கப்பட்டன. இதற்கான பாதுகாப்பு பணியில், 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். சிலைகள் கரைப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறை முகம், திருவொற்றியூர் மற்றும் எண்ணுார் ஆகிய இடங்களில், உயிர் காக்கும் கருவிகள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.