பதிவு செய்த நாள்
27
செப்
2018
12:09
சங்கராபுரம்: கோவிலை இடிக்க அதிகாரிகள் பெண்களின் முற்றுகை போராட்டத்தால் திரும்பி சென்றனர். .சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.,பாளையம், ஒட்டர் தெருவில் மூன்று ஆண்டிற்கு முன் பாட்டை புறம்போக்கில் விநாயகர் கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர்.
இதுகுறித்து எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாட்டை புறம்போக்கில் கட்டப்பட்ட விநாயகர் கோவிலை அகற்ற உத்தரவிட்டனர்.
அதனையொட்டி நேற்று (செப்., 26ல்) காலை டி.எஸ்.பி.,மகேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பி.டி.ஓ.,ரேய்சல் கலைச்செல்வி மற்றும் ஊழியர்கள், ஜே.சி.பி., மூலம் கோவிலை இடித்து அகற்ற தயாராகினர். அதனை அறிந்த அப்பகுதி பெண்கள், கோவிலை முற்றுகையிட்டனர். கோவிலை இடிக்ககூடாது என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதுபற்றி அதிகாரிகள், கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். நிலமையை உணர்ந்த கலெக்டர், இருதரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண உத்தரவிட்டார். அதனையேற்று கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் கலைந்து சென்றனர்.