பதிவு செய்த நாள்
09
அக்
2018
12:10
சென்னை: ஏழாம் வகுப்பு மாணவன் அளித்த தகவலால், சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகேயுள்ள, பசியாபுரம் கண்மாய் கரையில், பழமையான உறைகிணறு இருப்பதை, தமிழக தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழடியில், இந்த ஆண்டு, தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வு, முடிவுக்கு வந்துள்ளது.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களுக்கு, தொல்லியல் துறை குறித்தும், அகழாய்வு மற்றும் தொல்பொருட்கள் பற்றியும், தமிழக தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்தனர்.அப்போது, பழங்கால பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள், சிதறி கிடந்தாலோ, மண் மேடுகள் காணப்பட்டாலோ, தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.
இந்நிலையில், அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாந்தமுருகன், அக்., 6ல், தொல்லியல் துறையினரை தொடர்பு கொண்டான்.அப்போது, பசியாபுரம்கண்மாய் கரையில், மண் மேடு உள்ளது; அங்கு, பழமையான மண்பாண்டங்கள் காணப்படுகின்றன என, தகவல் தெரிவித்தான்.உடன், தொல்லியல் துணை இயக்குனர், சிவானந்தம் தலைமையில், தொல்லியல் துறையினர், அப்பகுதியை ஆய்வு செய்தனர். அங்கு, நான்கு உறைகளுடன் கிணறு இருந்ததையும், மூன்றாம் உறை பகுதியில், மண்பாண்டங்கள் இருந்ததையும் கண்டறிந்தனர்.தொடர் மழை காரணமாக, ஆய்வுப்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:தொல்லியல் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், தொல்பொருட்களை காக்க முடியும். தற்போது, அவர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாறி உள்ளனர். நாளை அவற்றின் காவலர்களாக மாறுவர். பசியாபுரம் பகுதியில், விரைவில் கள ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.