பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
நகரி : திருப்பதியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க, தேவஸ்தான அதிகாரிகள் தரிசன நேரங்களில் மாற்றம் செய்ய முடிவு மேற்கொண்டுள்ளனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், இலவச தரிசனத்தை துரிதமாக செய்வதற்கு வசதியாக, தற்போதுள்ள 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன நேரம், வரும், 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வார நாட்களில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அதிகாலை, 4 மணியிலிருந்து, 5 மணி வரை வழங்கப்பட்டு வந்த, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நிறுத்தம் செய்து விட்டு, அந்த நேரங்களில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லகு தரிசனம் : இரவு நேரங்களில் 500 ரூபாய் வி.ஐ.பி., தரிசனம் உள்ள திங்கள், வியாழக்கிழமைகளில் மாலை, 5 மணி வரையிலும் அருகிலிருந்து தரிசிக்கும் (லகு தரிசனம்) நடைமுறை அமல்படுத்தப்படும். செவ்வாய், புதன் கிழமைகளில் வழக்கம் போல் பிற்பகல், 2 மணி வரையில், சிறப்பு தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவில் வி.ஐ.பி., தரிசனம் இல்லாத வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் இரவு, 9 மணி வரை, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக் கிழமைகளில், காலை நேரத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்போது, மூலவரைக் கண்குளிர காணமுடியவில்லை என் பக்தர்களிடமிருந்து புகார் வருகின்றன.
இதனால் இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதியை நிறுத்தவும் ஆலோசிகப்பட்டு வருகிறது. தோமாலை, அர்ச்சனை சேவை நேரங்களில் இலவச தரிசன பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 15ம் தேதி முதல் வார நாட்களில் மாற்றம் செய்யப்பட உள்ள, 300 ரூபாய் சிறப்பு தரிசன நேரம் கீழ்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலை, 7 மணி முதல் இரவு, 9 மணி வரை, திங்கள் அன்று காலை, 7 மணி முதல் மாலை, 5 மணி வரை, செவ்வாய் காலை, 8 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை, புதன் காலை, 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை, வியாழன் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை, வெள்ளியன்று காலை, 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை, சனியன்று காலை, 7 மணி முதல் இரவு, 9 மணி வரை சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள். இத்தகவலை, தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.