கஷ்யப மகரிஷிக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். தாயின் பெயரால் ’வைநதேயன்’ என்றும் அழைப்பர். பெரிய சிறகுகளை விரித்தபடி, கைகள் குவித்து மகாவிஷ்ணுவை எப்போதும் வணங்குவதால் ’கருடாழ்வார்’ என பெயர் பெற்றார். கருடனின் வலிமையைக் கண்ட மகாவிஷ்ணு, அவரைத் தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தில் இருந்து திருப்பதி மலையை பூமிக்கு கொண்டு வந்தவர் கருடனே. பாற்கடலில் உள்ள சுவேதத்தீவிலுள்ள மண் கட்டிகளைச் சுமந்து வந்த கருடன், பூமியில் அவற்றைச் சிதறச் செய்தார். அதையே திருமண் (சுவேத மிருத்திகை) என நெற்றியில் நாமமாக இடுகின்றனர்.
கத்ரு என்பவளுக்கு, கருடனின் தாயான வினதை அடிமையாக இருந்தாள். இந்திரலோகத்திலுள்ள அமுத கலசத்தை கொண்டு வந்து கொடுத்தால் வினதையை விடுவிப்பதாக நிபந்தனை விதித்தாள் கத்ரு. நெருப்புக்குண்டத்தின் நடுவில் இருந்த அக்கலசத்தை துணிவுடன் எடுத்து வந்ததால் கருடன் ’தாயைக் காத்த தனயன்’ என போற்றப்படுகிறார். உபமன்யு முனிவரிடம் உபதேசம் பெற்ற கிருஷ்ணர் தவத்தில் ஈடுபட்ட போது, தன் நாடான துவாரகையை ஆளும் பொறுப்பை கருடனிடம் ஒப்படைத்தார்.