தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.
அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.