பதிவு செய்த நாள்
03
நவ
2018
11:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,6 முதல் 14 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. ஐப்பசி பூரத்தை முன்னிட்டு இன்று (நவ.,3) காலை 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன், உற்சவர் அம்பாளுக்கு ஏத்தி இறக்குதல் முடித்து தீபாராதனை முடிந்து உச்சி காலத்தில் ஆலவட்டத்துடன் உற்ஸவர் அம்மன் சேர்த்தியாகும். தீபாவளியை முன்னிட்டு நவ.,6 காலை 6:00 மணி, மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்விக்கப்படும். கோலாட்ட உற்ஸவத்தை முன்னிட்டு நவ.,8 முதல் 11 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருளி மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேர்த்தியாகும்.நவ.,12 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடக்கிறது.
கந்த சஷ்டி விழா நவ.,6 முதல் 13 வரை நடக்கிறது. நவ.,14 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கிறது. எனவே நவ.,6 முதல் 14 வரை உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம் தங்க ரத உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்த இயலாது, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.