பதிவு செய்த நாள்
03
நவ
2018
12:11
அம்மாபேட்டை: பவானி, சிங்கம்பேட்டையில், காவிரி ஆற்றில் ஆரத்தி மற்றும் வழிபாடு நடந்தது. அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில், காவிரி நதி மாசுபடுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், எட்டாவது ஆண்டாக ஆரத்தி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்த ரத யாத்திரை கடந்த மாதம், 23ல் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரியில் அன்னை காவிரி புனித தீர்த்த ரத யாத்திரை பெயரில் தொடங்கியது. பல்வேறு ஊர்களின் வழியாக, ஈரோடு மாவட்ட எல்லையான சிங்கம்பேட்டைக்கு, நேற்று முன்தினம் (நவ 1ல்) மாலை வந்தது. அகில இந்திய துறவியர் சங்க தலைவர் செந்தில் பாலசுப்பிரமணியம் தலைமையில், யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிங்கம்பேட்டை காவிரி படித்துறையில், காவிரி அன்னையின் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, தீபங்களை ஆற்றில் விட்டு வழிபாடு நடந்தது. காவிரி ஆற்றில் பிளாஸ்டிக், குப்பை, கழிவுகளை கலக்காமல் தடுக்க வேண்டும். பக்தி என்ற பெயரில் பிண்டம் கரைத்தல், திதி கொடுத்தல், துணிகளை ஆற்றில் வீசுதல் எனப் பல்வேறு வகையில் ஆற்றை மாசுபடுத்து வதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ரத யாத்திரை, காவிரி ஆறு செல்லும் வழிகளில் சென்று, நவ.,15ல் பூம் புகாரில் முடிகிறது.