பதிவு செய்த நாள்
03
நவ
2018
05:11
(ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதர், மஹேஸ்வரன் ஆகிய பஞ்ச (ஐந்து) ஆயதன தேவதைகள்)
முக்கியத்துவம்
ஆதித்யாம் அம்பிகாம் விஷ்ணும் கணனாதம் மஹேச் ’வரம் பஞ்ச தேவான் ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாச’னம்
நாம் மனிதப் பிறவி எடுத்ததன் பயன் எதுவாகின், மறுபிறவி இல்லாமல் செய்துகொள்வதேயாகும். இது எப்படி சாத்தியமாகும். நாம் பரப்ரம்மத்தோடு ஐக்கியமாகி பரப்ரம்மமாகவே ஆகிவிட்டால் பிறவி இல்லாமல் செய்து கொள்ளலாம். அதைத் தான் மோக்ஷம் என்று சொல்கிறோம். மோக்ஷம் என்றால் விடுதலை என்று பொருள். மோக்ஷ் எவ்வாறு கிடைக்கும். மோஹம் நீங்கினால் ஞானம் உண்டாகும்? ஞானம் வந்தால் மோக்ஷம் கிட்டும். மோஹம் நீங்குவது எப்படி? உள்ளத்தை உள்ளபடி அறிவதே ஞானம். உள்ளத்தை மாறாக அறிவது மோஹம். பொய்யான உலகை உண்மை என்று நினைப்பது மோஹம். அந்த ஹோமம் நீங்கினால் ஞானம் ஏற்படும். ஞானம் வரவேண்டுமாயின் வைராக்யம் ஏற்பட வேண்டும். வைராக்யம் ஏற்பட சித்த சுத்தி (நற்பண்புகள்) வர வேண்டும். சித்த சுத்தி அடைய கர்மானுஷ்டானம் செய்தல் வேண்டும். இவை யாவும் ஒருங்கே பெற ஈச்வரானுக்ரஹம் வேண்டும். ஈச்வரானுக்ரஹம் பெற “தேவதா ஆராதனம் ” இன்றியமையாதது. இதுதான் வாழ்க்கை நெறிமுறை, இதனை வகுத்துக் காட்டியவர் ஆதி சங்கரர் ஆவார்.
ஆதி சங்கரர், நாம் ஒவ்வொருவரும் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய கர்மாக்களில் ஒன்று தேவதா ஆராதனை என்றும், அவர்கள் அருவமும் உருவமுமான “ பஞ்சாயதன பூஜை” மிக மிக அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஸந்த்யா ஸ்நானம் ஜபோ ஹோம: தேவதாராதனம் ததா
ஆதித்யம் வைச்’வதேவம் ச ஷட்கர்மானி தினே தினே
தினசரி இப்பூஜையை ப்ராம்மணர்கள் தவறாது செய்து உய்ய வேண்டும் என்பதே ஆதிசங்கரரின் குறிக்கோள். தற்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுலபமாக, குறுகிய நேரத்தில் “லகு பஞ்சாயதன பூஜை ” முறையை தொகுத்துக் கொடுத்துள்ளோம். இதனை ஆஸ்தீக அன்பர்கள் தவறாது கடைபிடித்து பயன் அடைய பிரார்த்திக்கிறோம்.
பஞ்சாயதன பூஜை செய்ய வேண்டிய முறை
விடியற்காலை எழுந்து தினசரி காலைக்கடன்களை முடித்து, ஸ்நானம் செய்து, ஸந்தியாவந்தனம், காயத்ரீ ஜபங்களை செய்துவிட்டு, மாடியுடன் இப்பூஜையைச் செய்யவேண்டும்.
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜை
(ஸ்ரீ ஸ்கந்த ஷஷ்டி பூஜை)
பூஜைக்கு தேவையான பொருட்கள்
1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.
குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாற்றுப் பொருள்கள்
பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.
1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.
2. நைவேத்ய பொருட்கள்: பஞ்சாம்ருதம், பால், தயிர், இளநீர், ஏலம் கலந்த தீர்த்தம், பழங்கள், வெற்றிலை பாக்கு.
3. நாக புஷ்பம் மற்றும் பில்வபத்ரம், துளசி, சிவப்பு மலர்கள் அருகம் புல் ஆகியவற்றால் அர்ச்சிப்பது விசேஷம்.
இதில் கொடுத்திருப்பது சிவ பஞ்சாயதன பூஜை முறை. இந்த முறைப்படி மத்தியில் சிவனையும் வடகிழக்கு திசையிலிருந்து ப்ரதக்ஷிணமாக விஷ்ணு, சூரியன், கணபதி மற்றும் அம்பிகையை ஸ்தாபித்து பூஜிப்பார்கள்.
சக்தி பஞ்சாயதன பூஜையில் அம்பிகையை மத்தியிலும் தென்மேற்கிலிருந்து ப்ரத க்ஷிணமாக கணபதி, ஸூர்யன், விஷ்ணு மற்றும் சிவனை ஸ்தாபித்து பூஜிப்பார்கள்.
விஷ்ணுவை மத்தியிலும் தென்கிழக்கிலிருந்து ப்ரதக்ஷிணமாக கணபதி, ஸூர்யன், அம்பிகை மற்றும் சிவனை ஸ்தாபித்து பூஜிப்பது விஷ்ணு பஞ்சாயதன பூஜை ஆகும்.
கணபதியை மத்தியிலும் தென்கிழக்கிலிருந்து ப்ரதக்ஷிண மாக விஷ்ணு, ஸூர்யன், அம்பிகை மற்றும் சிவனை ஸ்தாபித்து பூஜிப்பது கணபதி பஞ்சாயதன பூஜை ஆகும்.
ஸூர்யனை மத்தியிலும் தென்கிழக்கிலிருந்து ப்ரதக்ஷிணமாக விஷ்ணு, கணபதி, அம்பிகை மற்றும் சிவனை ஸ்தாபித்து பூஜிப்பது ஸூர்ய பஞ்சாயதன பூஜை ஆகும்.
அவரவர் குல வழக்கங்களை தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி ஸ்வாமிகளை அமைத்து வழிபடுவது உத்தமம்.