குஜிலியம்பாறை: அய்யாமலைக்கரட்டில் உள்ள முருகன் கோயில் மற்றும் 500 ஆண்டு பழமை வாய்ந்த சித்தர் சமாதியை கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி அய்யாமலைக்கரடு மீது 500 ஆண்டு பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. ஆர்.புதுக்கோட்டை, கோவிலுார், குளத்துப்பட்டி ஊராட்சி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோயிலில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ‘சங்கரலிங்கம்’ என்பவர் முன்பு இக்கோவிலுக்கு வந்து இங்கேயே தங்கி இறைபணியில் ஈடுபட்டார்.
இவர் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்தபோது, அங்கேயே சமாதி கட்டி அடக்கம் செய்துள்ளனர். இந்த கோயிலுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி தலைவர் கோபால்சாமி முயற்சியால் கட்டடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு மேல்புறம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் அடியில் பொது மக்கள் உட்கார்ந்து செல்வதற்காக நீண்ட கல் உள்ளது. இந்த கல்லை, நன்கு வளர்ந்த ஆலமரத்தின் வேர்கள் இறுக்கிப் பிடித்துள்ளன. இதில் சிலர், சித்தர் ஜீவ சமாதி என்றும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் எழுதிவைத்துள்ளனர்.
கோயிலில் நிர்வாகி கோபால்சாமியிடம் கூறியதாவது: இந்த முருகன் கோயில் பழமை வாய்ந்தது. கல் சிலையை வைத்து வணங்கி வந்தபோது, எல்லைப்பட்டி புதுார் முருகேசன் என்ற பக்தர் ஐம்பொன் சிலை செய்து கொடுத்தார். இங்கு சித்தர் சமாதி இருந்ததற்கான எந்த ஆதாரமும் தெரியவில்லை. சமீபத்தில்தான் சிலர் அவ்வாறு எழுதியுள்ளனர். இது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம், என்றார்.