ஏனாம்: ஏனாம் பகுதியில் லட்சுமி பூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது.புதுச்சேரியின் இன்னொரு மாவட்டமான காரைக்கால் தமிழகத்திலும், மாகி பகுதி கேரளாவிலும், ஏனாம் பகுதி ஆந்திராவிலும் அமைந்துள்ளன. இதனால், ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படும் விழாக்கள், பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாக உள்ளது. இது புதுச்சேரியின் சிறப்பு அம்சமாகும்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏனாம் பகுதியில், புதுச்சேரி, காரைக்காலை போல தீபாவளியை கொண்டாடுவது கிடையாது. அன்றைய தினம் பட்டாசு வெடிப்பதும் கிடையாது. இதனால், ஏனாம் பகுதியில் நேற்று பட்டாசு சத்தம் கேட்கவில்லை.அதேசமயம், தீபாவளிக்கு மறுநாளன்று நடத்தப்படும் லட்சுமி பூஜை, ஏனாமில் பிரசித்தி பெற்றதாகும். ஏனாமில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு வகையான இனிப்பு பட்சணங்களை செய்து, இன்று மாலை லட்சுமிக்கு பூஜை செய்வது வழக்கம். பூஜை முடிந்தவுடன், சிறுவர் சிறுமிகள் தீபாவளியைபோல பட்டாசுக்களை வெடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.