பதிவு செய்த நாள்
11
நவ
2018
05:11
மதுரை:சபரிமலை மண்டல விரத காலம் நவ.,16ல் துவங்கவுள்ள நிலையில், பம்பையில் துாய்மைப்பணி மேற்கொள்ள வரும்படி, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத் தலைவர் மு.விஸ்வநாதன், செயலர் அய்யப்பனுக்கு, சபரிமலை தனி அதிகாரி பிரேம்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக 300 சேவார்த்திகள் நேற்று மாலை பம்பை புறப்பட்டு சென்றனர். சமீபத்தில் பம்பை உள்ளிட்ட பகுதிகளை கடும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டதால் உருக்குலைந்து காணப்படுகிறது. மண்டல விரத காலம் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் பம்பை புனரைப்பு பணியில் கம்யூ., அரசு தீவிரம் காட்டியதாக தெரியவில்லை. குறைந்தபட்சம் குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தேவிகுளம் கூடுதல் கலெக்டர் பிரேம்குமார் சபரிமலை தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து பம்பை புனரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன. சபரிமலையில் பல ஆண்டுகளாக சேவையாற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் உதவியை தனி அதிகாரி நாடியுள்ளார்.
தொண்டர்படை சேவை: மதுரை மாவட்ட இணை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கார்த்திகை முதல் தேதிக்கு முன்பு பம்பையில் துாய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சேவார்த்திகளை உடனே பம்பைக்கு அனுப்புமாறு பிரேம்குமார் கேட்டு கொண்டார். இதையடுத்து மதுரை, புதுக்கோட்டை, திருச்சியில் இருந்து முதற்கட்டமாக 300 தொண்டர்கள் பம்பைக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். அடுத்தடுத்து 350 பேர் வீதம் ஆறு குழுக்கள் ஷிப்ட் முறையில் சபரிமலையில் சேவையாற்றுவர். நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. அவை அப்புறப்படுத்தப்படும். இம்மூன்று இடங்களிலும் 24 மணி நேர அன்னதானம் வழங்கப்படும்.பெரியானை வட்டம், கரிமலை, அப்பாச்சிமேட்டில் குடிநீர் வழங்கப்படும். 24 ஆக்ஸிஜன் பார்லர்களில் பயிற்சி பெற்ற தொண்டர்கள் சேவையாற்றுவர். மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து நிலக்கல்லில் பழுதான வாகனங்கள் சரிசெய்து கொடுக்கப்படும், என்றார்.
எமர்ஜென்சி படை தயார்: தமிழக தொண்டர் படை தளபதி ராஜதுரை கூறியதாவது: தமிழகத்தில் 3,500 கிளைகளுடன் சங்கம் செயல்படுகிறது. ஆயுள்கால உறுப்பினர்களாக பத்தாயிரம் பேர் உள்ளனர். மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக இரண்டு மாதங்கள் சபரிமலையில் தங்கியிருந்து தொண்டர் படையினர் சேவையாற்றுவர். இதற்காக யாரும் சம்பளம் வழங்குவது கிடையாது. சபரிமலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பையில் துாய்மைப்பணி இன்று (நவ.,11) முதல் துவங்குகிறது. நவ.,16க்குள் துாய்மைப்பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு மூச்சு திணறல், மாரைடைப்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ முகாம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எமர்ஜென்சி பிரிவு தொண்டர் படை 24 மணி நேரமும் முக்கிய இடங்களில் ஸ்ட்ரெச்சருடன் தயாராக இருப்பர். எருமேலி, அழுதா, கல்லிடங்குன்று, கரிமலை, பெரியானவட்டம், பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்படும். சபரிமலையில் சேவையில் 3,000 தொண்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர், என்றார்.