சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2018 05:11
சபரிமலை: சபரிமலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி, தேசவிரோத சக்திகள் ஊடுருவி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், இரண்டாவது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சித்திரை ஆட்டத்திருநாள் மற்றும் ஐப்பசி மாத பூஜையின் போது, சபரிமலையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில், சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், நேற்று அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் தற்போதுள்ள சூழ்நிலை மோசமாகவும், அபாயகரமாகவும் உள்ளது. சித்திரை ஆட்டதிருநாள் பூஜைக்கு வந்த பெண்களை தடுத்தது தவறு. 18-ம் படியில் ஏறியதில் ஆசார மீறல் நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருவர். தற்போதைய நிலை தொடர்ந்தால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். நம்பிக்கை மற்றும் ஆசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பயன்படுத்தி தேச விரோத சக்திகள், ஊடுருவி அவர்கள் லட்சியங்களை நிறைவேற்ற முயற்சி செய்யக்கூடும். அரசியல் கட்சிகள் போராட்டங்களில் கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். ஐப்பசி மாத பூஜைக்கு பின்னரும், இது போல், ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.