பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
சென்னை: வெளிநாடுகளில் உள்ள, தமிழக சிலைகள், விரைவில் மீட்கப்படும், என, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.அறநிலைய துறை அதிகாரிகள், ஸ்தபதிகள், இன்ஜினியர்களுக்கு, கோவில்களில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாப்பது, கோவில்களை பழமை மாறாமல் புனரமைப்பது குறித்த, இரண்டு வார கால சான்றிதழ் பயிற்சி, தமிழக தொல்லியல் துறை சார்பில், நேற்று (நவம்., 13ல்) தொடங்கப்பட்டது.
இதை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், துவக்கி வைத்தனர்.பின், அமைச்சர் பாண்டிய ராஜன் பேசியதாவது:தமிழகத்தில், 38 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறையின் கீழும், 12 ஆயிரம் கோவில்கள், தனியாரிடமும் உள்ளன. இந்த, 50 ஆயிரம் கோவில்களில், 10 லட்சத்திற்கும் அதிகமான சிற்பங்கள் உள்ளன. அவற்றில், வரலாறு, பண்பாடு, கலை, கலாசாரம் உள்ளிட்டவை பொதிந்துள்ளன.அவற்றை காப்பதற்கு, சட்டங்களும், அவற்றில் முரண்பாடுகளும் உள்ளன. ஏற்கனவே, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் தொல்பொருட்கள், அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள, தமிழக சிலைகள் மற்றும் புராதன சின்னங்கள், சிறப்பு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு மீட்கப்படும்.தமிழக அருங்காட்சியகங்களின் நிலை உயர்த்தப்படும். சென்னை - எழும்பூர் அருங்காட்சியகம், உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும். அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களின் வழியே, வரலாறு எழுதப்படுகிறது. கீழடி போன்ற இடங்களில், ஒரு பிள்ளை யார் சிலை, சமஸ்கிருத எழுத்து போன்ற, சமய அடையாளங்கள் கிடைக்காதா... என்ற, உள் நோக்கத்துடனும், சில ஆய்வுகள் நடக்கின்றன.இந்த நிலையில், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவற்றை பாதுகாப்பது தொடர்பாக, பயிற்சி அளிக்கப் படுவது, சிறப்புக்குரியது.இவ்வாறு, அவர் பேசினார்.
அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், கோவில்களை பாதுகாத்து, அவற்றின் தனித்தன்மையான விழாக்களை தொடர்ந்து நடத்த, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.கலை பண்பாட்டு துறை மற்றும் தொல்லியல் துறை கூடுதல் கமிஷனர் ராமலிங்கம், அறநிலையத் துறை கமிஷனர் ராமச்சந்திரன், அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.