ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து முருகப் பெருமான் பல்லக்கில் புறப்பாடாகி சூரனை வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழாவை யொட்டி நேற்று (நவம்., 13ல்) ராமேஸ்வரம் கோயிலில் இருந்து முருக கடவுள், வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகி கோயில் மேற்கு ரதவீதியில் எழுந்தருளினர். பின் வேலாயுதத்தை பயன்படுத்தி அங்கிருந்த சூரன் தலையை வெட்டி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர்.
இதன் பின் முருக கடவுளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அங்கிருந்து முருக கடவுள் மயில் வாகனத்தில் புறப்பாடாகி கோயிலுக்கு சென்றார். இரவு கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால் அபிஷேகம், சிறப்பு பூஜை விமரிசையாக நடந்தது.
ராமநாதபுரம், பரமக்குடியில் சூரசம்ஹாரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், குண்டுக்கரை முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா நடந்தது. ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த சூரசம்ஹாரத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு வைகை ஆற்றங் கரையில் மயில் வாகனத்தில் வந்து சூரனை வதம் செய்தார். இன்று 15 ல் காலை தெய்வானைக்கும் - சுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
*பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆற்றுப் படித்துறையில், அருள்பாலிக்கும் சக்தி குமரன் செந்தில் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது.