பதிவு செய்த நாள்
14
நவ
2018
12:11
காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு அறுமுக செவ்வேள் பெருமான்
எழுந்தருளல் நிகழ்ச்சியும், சூரபன்மன், தாரகன், சிங்கமுகன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சியும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று (நவம்., 13ல்) நடந்தது. மாலை 4:35 மணிக்கு அறுமுக செவ்வேள் பெருமான் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 5:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் சூரனை தடிதலும், ஆட்கொள்ளலுமான சூரசம்ஹார நிகழ்ச்சி சன்னதி வாசல் முன் நடந்தது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சண்முகநாத பெருமான் வெள்ளி ரதத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், பாலசுப்பிரமணியன் யானை வாகனத்திலும், முத்துகந்தர் மயில்
வாகனத்திலும், வீரவாகு தேவர் குதிரை வாகனத்திலும், தண்டாயுதபாணி கடா வாகனத்திலும் எழுந்தருளினர்.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று (நவம்., 13ல்)காலை 10:00 மணிக்கு முருகனுக்கு சண்முகா அர்ச்சனைக்கு பின் அபிஷேக ஆராதனை நடந்தன. மாலை 5:00 மணிக்கு முருகன் சன்னதியிலிருந்து புறப்பாடாகி சிவகாமி அம்மன் கோட்டத்திற்கு சென்று வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் கோயிலிலிருந்து சூரனை வதம் செய்ய தேரோடும் வீதிக்கு சென்று அங்கு பிள்ளையார் தேர் அருகே எழுந்தருளினார்.
அங்கு உலாவிக்கொண்டிருந்த சூரனை வேலை எய்து வதம் செய்தார். தொடர்ந்து மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முருகனுக்கு தீபாராதனை நடந்து திருவீதி வலம் வந்தார். திரளாக
பக்தர்கள் கூடி சூரசம்ஹாரத்தை தரிசித்தனர்.
இன்று (நவம்., 14ல்) திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வர காலை 10:30 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.