பரிதவிப்பு : பிரசாத விற்பனை வீழ்ச்சிசபரிமலை: போலீசின் கடுமையான நேரக்கட்டுப்பாடு களால் சபரிமலையில் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். பகல், இரவு வித்தியாசம் இல்லாமல் பக்தர்கள் மலை ஏறுவது தடுக்கப்படுகிறது. இதனால் பிரசாத விற்பனை வீழ்ச்சி அடைந்து உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் போராட்டம் நடந்தது.
இதையடுத்து சபரிமலையை உயர் பாதுகாப்பு மையமாக அறிவித்து கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் விதித்து வரும் கட்டுப்பாடுகள் பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.நிலக்கல்லில் இருந்து இரவு 8:00 மணிக்கு பின்னர் பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அதன் பின்னர் வரும் பக்தர்கள் இரவு 1:00 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு அத்தாழபூஜை முடிந்து நடை அடைத்து விட்டால் அதன் பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற முடியாது. இரவு 1:00 மணிக்கு பின்னர்தான் மலை ஏற முடியும்.
அதுபோல பகலில் 11:30 மணி முதல் 2:00 மணி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேற முடியாது.பெருமழையில் உருக்குலைந்த பம்பையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் பக்தர்கள் இங்கு பரிதவிக்கின்றனர். பக்தர்கள் வருகை குறைந்துள்ள தாலும், குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பயணத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததாலும், சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்கப்படாததாலும் பிரசாத விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான அப்பம், அரவணை ஸ்டாக் உள்ளதால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர் சங்கரதாஸ் ஆகிய இருவரும் நேற்று (நவம்., 18ல்) மாலை டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ராவை சந்தித்து சபரிமலையில் போலீஸ் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் முதல்வர் அலுவலகத்தில் இவர்கள் டி.ஜி.பி.யுடன் ஆலோசனை நடத்தினர்.