பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
சேலம்: பிரிட்டிஷ் காலத்தில் வெளியிடப்பட்ட, ஒரு ரூபாய் நாணயத்துக்கு, சேகரிப்பாளர்கள் இடையே நிலவும் போட்டியால், சேலத்தில், 3,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, என, சேலம்,
பாராமஹால் நாணயவியல் சங்க இயக்குனர் சுல்தான் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: பிரிட்டிஷ் பேரரசர், ஐந்தாம் ஜார்ஜ், 1911ல், வெள்ளியால் தயாரிக்கப்பட்ட, பன்றி உருவம் பொறித்த, ஒரு ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அதன் எடை, 11.66 கிராம். 1936 வரை, 12 வித நாணயங்கள் வெளியிடப்பட்டன.
94 லட்சம் நாணயங்கள் தயாரித்த நிலையில், ஏழு லட்சம் மட்டுமே, மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டன. ஆனால், பன்றி உருவம் பொறித்திருந்ததால், சமயம் சார்ந்த வதந்தி
பரப்பப்பட்டது. இதனால், பிரிட்டிஷ் அரசு, மக்கள் பயன்பாட்டிலிருந்து, நாணயங்களை திரும்ப பெற்றது.
இதனால், அது மக்களிடம் அரிதான பொருளாக மாறிவிட்டது. தமிழகத்தில், சொற்ப அளவில் மட்டும், நாணய சேகரிப்பாளர்கள் உள்ளதால், அந்த நாணய மதிப்பு எகிறியுள்ளது. அதை, சேலத்தில், ஒவ்வொரு மாதமும், கோட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும், நாணய சேகரிப்பாளர்கள், 3,500 ரூபாய் வரை விற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.