பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
சேலம்: கோவிலுக்குள், ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், தினமும் நூற்றுக்கணக்கானோர், விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வதோடு, பிரகாரங்களில் வலம் வருவர்.
அவர்களின் வாகனங்கள், கோவில் மதில்சுவரை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப் படுகின்றன. கோவில் அலுவலகத்தில் பணிபுரிவோர், தரிசனத்துக்கு வரும் ஊழியர்களின் உறவினர்கள், வி.ஐ.பி.,க்கள் எனக்கூறி கொள்வோர், தங்கள் இருசக்கர வாகனங்களை, கோவில் உட்புறம் நிறுத்துகின்றனர். குறிப்பாக, கண்ணாடி மாளிகை அருகே; பிரதான நுழைவாயில் அருகேவுள்ள ஸ்டால் பகுதி; அலுவலக முன்புறம் நிறுத்தப்படுவதால்,
அப்பகுதிகள், இருசக்கர வாகன, ஸ்டாண்டாக மாறியுள்ளன.
இதனால், பிரகாரத்தை வலம் வர முடியாமல், அன்னதானம் நடக்கும் பகுதியில், பக்தர்கள் அமர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது: கோவில் மதில்சுவர் பகுதியில், வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க, கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அலுவலக ஊழியர்கள், அவர்களது உறவினர்களின்
வாகனங்கள், ஆகமவிதிமீறி கோவிலுக்குள் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.