விவசாயி ஒருவர் தன் வாத்துக்களுக்கு சிவப்பு, பச்சை என வர்ணம் தீட்டி தனித்தனியாக அடைத்து வைத்திருந்தார். நடுவில் தடுப்பு வேலி இருந்ததால், ஒன்றோடொன்று உறவாட முடியாமல் வருத்தத்தில் இருந்தன. ஒருநாள் கடும்மழை பெய்யவே, வேலிகளுக்குள் நீர் புகுந்தது. நீர்மட்டம் உயர உயர வாத்துக்கள் மிதக்க ஆரம்பித்தன. வேலிக்கு மேலே நீர்மட்டம் வர, இரண்டு பிரிவு வாத்துக்களும் ஒன்றாக சேர்ந்தன. மகிழ்ச்சியுடன் உறவாடி மகிழ்ந்தன.
இதே நிலையே இன்று உலகிலும் நிகழ்கிறது. சுனாமி, பூகம்பம் என இயற்கை சீற்றங்கள் நிகழும் போது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், ஒரே இடத்தில் குவிகிறார்கள். அவர்களுக்குள் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை. வீட்டில் வகை வகையாய் சாப்பிட்டவர்கள் கூட கிடைத்ததை சாப்பிட்டு கொள்கின்றனர். மெத்தையில் படுத்தவரும், குடிசையில் கிடந்தவரும் சேர்ந்து தரையில் துாங்குகின்றனர். அனைவரும் சமநிலையில் இருக்கின்றனர். ஒற்றுமையில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என உணர்த்தவே கடவுள் இப்படி சோதிக்கிறார். “மக்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் இருப்பது எவ்வளவு ரம்மியமானது என்பதைப் பாருங்கள்” என பைபிள் சொல்கிறது.