பதிவு செய்த நாள்
24
நவ
2018
01:11
காரமடை:திருமங்கையாழ்வார் திருநட்சத்திர தினம், காரமடை ரங்கநாதர் கோவிலில் நேற்று (நவம்., 23ல்) கொண்டாடப்பட்டது.
வைணவத்தை வாழ்விக்க அவதரித்த, 12 ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் அவதரித்த தினமான நேற்று (நவம்., 23ல்), வைணவ கோவில்களில் கொண்டாடப்பட்டது. சாரங்கம் எனும் வில்லின் அம்சமாக அவதரித்த இவர், சோழ மண்டலத்தில் திருமங்கை நாட்டில் திருக்குறை யரூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சதிரத்தில் பிறந்தார்.சோழ மன்னனின் சேனாதிபதியாய் இருந்து பல போர்களில் வெற்றி பெற்றதால், திருமங்கை நாட்டுக்கு சிற்றரசனாகினார்.
வைணவ மருத்துவரின் பெண் குமுதவள்ளியை கரம் பிடிக்க, பஞ்ச சமஸ்காரங்களையும் நம்பி எனும் எம்பெருமானிடம் பெற்றுக்கொண்டார்.
திருமங்கையாழ்வார் பல திவ்யதேசங்களுக்கு சென்று பாசுரங்கள் பாடி, மங்களாசாசனம் செய்தார். 1,084 பாசுரங்கள் பாடியுள்ளார். இவரது ஜென்ம நட்சத்திரமான நேற்று (நவம்., 23ல்), காரமடை ரங்கநாதர் கோவில் ராமானுஜர் சன்னதியில் ஸ்தபன திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பரிவட்ட மரியாதையுடன் உற்சவர் திருமங்கையாழ்வாருக்கு வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் முன் எழுந்தருளச் செய்து, இவர் இயற்றிய பாசுரங்களை கோவில் ஸ்தலதார்கள் வேதவியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் சேவித்தனர். கோவில் ஸ்தானிகர் திருவேங்கடம், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.