பதிவு செய்த நாள்
24
நவ
2018
02:11
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி வீடுகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடந்தது. கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில், சிவன் கோயில்களில் திருவிளக்கு அலங்காரம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. வீடுகளில் மாலை 6:00 மணிக்கு தீபங்கள் ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர். கற்பக தரு என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகளால் கோயில் முன் கோபுர வடிவ சொக்கப்பனை அமைத்து தீபம் ஏற்ற இதன் ஜோதியை பக்தர்கள் வழிபட்டனர்.
விருதுநகர் வாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் தேசபந்து மைதானத்தில் கோயில் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. விருதுநகர் சிவன்கோயில், வெயிலுக்குந்தமன் கோயில், சூலக்கரை சவுடாம்
பிகை கோயில், சிவகாசி விஸ்வநாதசாமி கோயில், சிவகாசி முருகன் கோயில், லிங்கபுரம் காலனி சக்தி மாரியம்மன் கோயில், மாரனேரி கான்சாபுரம் முருகன் கோயில், எரிச்சநத்தம் மாரியம்மன் கோயில், திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி கோயில் என மாவட்டம் முழுவதும் கார்த்தீகை தீபதிருவிழா கோலாகலமாக நடந்தது.
*ராஜபாளையம்: மாயூரநாதசுவாமி கோயில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடந்தது. மாலையில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் சுவாமி சிவானந்த பரமஹம்சர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடந்தது.
ஆற்றில் 4 அடி உயரத்திற்கு நீர் வரத்து இருந்ததால் தீயணைப்புத் துறை சார்பில் கயிறுகள் கட்டி ஆற்றை கடந்து நீர் காத்த அய்யனார் சுவாமியை வழிபட ஏற்பாடு செய்திருந்தனர். சஞ்சீவி மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் கிருஷ்ணன் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் மற்றும் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு, ரகு மற்றும் ரமேஷ் பட்டர் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை வீதியுலாவுக்கு எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளங்கோ, செயல் அலுவலர் சுந்தரராஜ் செய்தனர்.