* நடந்ததை எண்ணி வருந்துவதாலும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதாலும் பயனில்லை. விதியை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு. * தன்னைத் தானே திருத்திக் கொண்டு உண்மையின் பாதையில் நடந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம். * உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது. *அன்பு ஒன்றே துன்பத்தை போக்கவல்லது. நல்ல சிந்தனையால் மனம், உடல் பலம் பெறுகிறது. * அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அதுவே உலக இயக்கத்தின் ஆதாரமாக உள்ளது. * மனதிற்குள் கோபத்தை நுழைய விடாதீர்கள். எப்போதும் மலர்ந்த முகத்துடன் செயல்படுங்கள். * அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. செல்வத்திற்கும், புகழிற்கும் அறிவு தான் வேர். * தர்மம் தவிர்த்த மற்றதெல்லாம் பொய். தர்மத்தை சூது கவ்வினாலும் பின்பு தர்மமே வெல்லும். * நீதிநெறி தவறாமல் எங்கும் எப்போதும் நேர்மையை பின்பற்றி வாழ வேண்டும். * தர்மம் செய்வதை அன்றாடக் கடமையாக்கிக் கொள். தர்மத்தால் உன் சந்ததியும் பலன் பெறும். * தெய்வ வழிபாடு உணவைக் காட்டிலும் அவசியமானது. உண்மையான பக்தி அமிர்தத்திற்கு ஈடானது. * உண்மையை உயிராக போற்று. உண்மை பேசுபவர்கள் உயர்வாக மதிக்கப்படுவர். * மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. இல்லாவிட்டால் தண்டனைக்கு ஆளாவாய். * பிறருக்கு துன்பம் தருவது பாவம். மற்றவர்களுக்கு இன்பம் தருவது புண்ணியம். * பிறரை ஏமாற்ற மாட்டேன் என்ற உறுதி வந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராவான். * கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெறலாம். படிப்படியான வளர்ச்சியே நிலைக்கும். வேகமான வளர்ச்சி வந்த வேகத்தில் படுத்து விடும். * பொருள் படைத்தவனிடம் சமத்துவ குணம் ஏற்பட்டால் உலகமே சீர்பெறும். * தலை உச்சியின் மீது வானமே இடிந்து விழுந்தாலும் அச்சப்படுவது கூடாது. * ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்தது போல எண்ணி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். - தெளிவுபடுத்துகிறார் தேசியக்கவி