ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றிலும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3.50 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வாறுகால் அமைக்க உள்ளனர். ராமேஸ்வரம் கோயிலில் மழைநீர் வெளியேற ரதவீதியை சுற்றிலும் வாறுகால் குழாய் வழியாக மழைநீர் கடலில் கலந்து விடும். ஆனால், இக்குழாயில் தனியார் லாட்ஜ், ஓட்டல் கழிவு நீரையும் திறந்து விடுவதால் கொள்ளளவு தாங்காமல் கோயிலுக்குள் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைதுறை சார்பில் கோயில் கிழக்கு, தெற்கு, வடக்கு ரதவீதியில் 3.50 கோடி ரூபாயில் கான்கிரீட் வாறுகால் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி 10 அடி ஆழம், 6 அடி அகலத்தில் கான்கிரீட் கலவையில் வாறுகால் அமைக்க நேற்று, கோயில் வடக்கு ரதவீதியில் மெகா பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணி முடிய மூன்று மாதம் ஆகும். இதன் பின் கோயிலில் இருந்து வெளியேறும் மழைநீர் தடையின்றி வாறுகாலில் சென்று கடலில் கலக்கும், என ஊழியர்கள் தெரிவித்தனர்.