பதிவு செய்த நாள்
24
டிச
2018
11:12
தேவிபட்டினம்: ராமநாதபுரம் அருகேயுள்ள நவபாஷாண கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இங்கு தோஷ நிவர்த்திக்காக பரிகார பூஜை செய்ய பக்தர்கள் வருகை தருவார்கள். தற்போது ஐயப்ப சீசன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பரிகார ஸ்தலம்: நவபாஷாண கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. தோஷ பரிகார பூஜைகள் செய்வதற்காக புரோகிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை நேரங்களில் கடல் நீர் மட்டம் உயர்வதும், மாலையில் கடல் நீர் மட்டம் குறைவதும் இயற்கையாக இருக்கும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அதிகளவில் காணப்படும். பக்தர்கள் கடல் நீருக்குள் இருக்கும் நவக்கிரகங்களை சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பத்கர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
பராமரிப்பு இல்லை: அடிப்படை வசதிகளான இலவச கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முறையாக பராமரிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. இருள் நேரங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பல விளக்குகள் எரியாத நிலையில் உள்ளது. பெண்கள், ஆண்களுக்கான உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகள் பராமரிப்பு இல்லாததால், பக்தர்கள் உடை மாற்ற செல்லும் போது அதிருப்தியடைகின்றனர். நவபாஷாணத்திற்கு செல்ல கடல் பகுதியில் அமைக்கப்பட்ட நடை மேடை பகுதிகளில் உள்ள தரை தளம் பெயர்ந்துள்ளது. நடை மேடையையும், நவபாஷாணத்தையும் இணைக்கும் பகுதியில் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. இதில் சிறுவர்கள் தவறி கடலுக்குள் விழும் அபாயம் உள்ளது.
வீணடிக்கப்பட்ட பூங்கா: 31.52 லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறப்பதில்லை. மதிய நேரங்களில் வரும் பக்தர்கள் இளைப்பாற இடம் இன்றி வெயிலில் தவிக்கும் நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பக்தர்கள் வரும்போதாவது, இந்த பூங்காவினை திறக்க வேண்டும். தற்போது பூங்கா பகுதியில் புல் முளைத்து, அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் நீராடுவதற்கான படித்துறையும் அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் இரு புறங்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். கடல் பகுதியில் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்து வருகின்றனர். நவபாஷாணம் பகுதியில் பக்தர்கள் கடலில் நீராட படித்துறை அமைக்க வேண்டும். இது போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
போலிகள் நடமாட்டம்: பக்தர்கள் நவபாஷாண கோயில் செல்வதற்கு முன்பு தனியார் ஒப்பந்ததாரர்கள் பணம் வசூலித்து வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறையே நிர்வகிக்கிறது. பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கும், குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இங்குள்ள போலிகள் சிலர் பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க முன் வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநில பயணிகளும் வருகை தருவதால், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். ----
வழிகாட்டி தேவை: நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்களை முறைப்படுத்தி, அவர்களுக்கான உதவிகளை செய்ய இந்து சமய அறநிலையத்
துறையினரே வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும். பிற மொழிகள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை: போலியாக பக்தர்களிடம் பரிகார பூஜை செய்வதாக ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். போலிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை புகார்கள் தெரிவிக்க வேண்டும்.