பதிவு செய்த நாள்
24
டிச
2018
01:12
பிராட்வே: மண்ணடி, நவ நடராஜர் சந்திப்பு பெருவிழாவைக் காண, ஏராளமான பக்தர்கள் திரண்டனர். வாத்தியங்கள் முழங்க, நடனமாடிய பக்தர்கள், நடராஜர்களை வழிபட்டனர்.
சென்னை, மண்ணடி, முத்தியால்பேட்டை, சிவனடியார் சேவா சங்கம் சார்பில், நவ நடராஜர் சந்திப்பு பெருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.நடப்பாண்டு, நவ நடராஜர் சந்திப்பு பெருவிழாவை முன்னிட்டு, 16ம் தேதி, சந்திப்பில் பங்கு பெறும் அனைத்து கோவில்களுக்கும் சென்று, நடராஜ பெருமானை, மாணிக்கவாசகர் அழைக்கும் வைபவம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் (டிசம்., 23ல்), நடராஜர் அபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான, நவ நடராஜர் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, 11:00 மணிக்கு, மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள, மல்லிகேஸ்வரர் கோவில் எதிரில் நடைபெற்றது.மண்ணடி மல்லிகேஸ்வரர், கச்சாலீஸ்வரர், காளிகாம்பாள், செங்கழுநீர் பிள்ளையார், மூக்கர் நல்ல முத்து பிரசன்ன விநாயகர், சண்முக செல்வ விநாயகர்,முத்துகுமார சுவாமி, ரவீஸ்வரர், சிவலோக கூத்தன் சிவலோக திருமடம் ஆகிய கோவில்களில் இருந்து, நடராஜர்கள் பங்கேற்றனர்.மேற்கண்ட கோவில்களில் இருந்து, ஒன்பது நடராஜர்கள், வண்ண மலர் அலங்காரங்களில், மல்லிகேஸ்வரர் கோவில் முன் சந்திக்கும் வைபவம் நடைபெற்றது.
உடன், தம்பு செட்டி தெருவில் இருந்து, ஆனந்த விநாயகர் புறப்பாடு நடைபெற்று, கோவில் முன் வந்தடைந்தது.ஒரே இடத்தில், ஒன்பது நடராஜர்கள் சந்திக்கும், நவ நடராஜர் பெருவிழாவைக் காண, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மல்லாரி பாடுதல், நாதஸ்வரம், சங்கநாதம், கயிலாய வாத்தியங்கள்முழங்க, பக்தர்கள் திருவாசகம் பாடினர். சிவன், பார்வதி, காளி, நரசிம்மன் வேடமணிந்த பக்தர்கள், ஆக்ரோஷ மாக வாத்தியங்களுக்கு ஏற்றபடி ஆடினர்.நவ நடராஜர் சந்திப்பின் நிறைவாக, மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நவ நடராஜர்களுக்கும் சாத்தப்பட்டன. பின், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது பக்தர்கள், ஓம் நமசிவாயா... என, விண்ணதிர முழங்கினர்.சந்திப்பிற்கு பின், நவ நடராஜர்களும், தங்கள் கோவில்களுக்கு புறப்பாடாகினர்.