பதிவு செய்த நாள்
24
டிச
2018
02:12
வடவள்ளி: இனி விசேஷ நாட்களில், மருதமலை முருகனை தரிசிக்க, ஹெலிகாப்டரில் சென்று, மேலிருந்து கயிறு வழியாக இறங்க வேண்டும் போலிருக்கிறது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, நேற்று ஏராளமான பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளும், விடுமுறை தினமுமான நேற்று (டிசம்., 24ல்), கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலிலும், நேற்று (டிசம்., 24ல்) அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வசூலில் மட்டும் குறிமருதமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கு வாகனங்களில் செல்பவர்களிடம் டூவீலர்களுக்கு, 10 ரூபாயும், கார்களுக்கு, 30 ரூபாயும் கோவில் நிர்வாகம் வசூலிக்கிறது.
மலையில், பார்க்கிங் இடவசதி குறைவாக உள்ளதால், மலையில் இருந்து கீழ் இறங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை பொறுத்து, அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு வாகனங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.நேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களில் வந்தனர். ஆனால், கீழ் இறங்கும் வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுக சிறுக வாகனங்களை மேலே அனுப்பாமல், ஒரே நேரத்தில் அதிக வாகனங்களை அனுமதித்தனர்.
நீண்டநேரம் காத்திருப்பு இதனால், மலையில் மேலே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நெடுநேரத்துக்கு எந்த வாகனமும் நகர முடியாமல் போனது. தேவஸ்தானம் சார்பில் இயக்கப்படும் பஸ்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல முடியாமல், பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தனர்.விசேஷ நாளான நேற்று, அதிக பக்தர்கள் வருவர் என தெரிந்தும், கோவில் நிர்வாகம் சார்பில், வாகனங்களை ஒழுங்குபடுத்த ஒருவரை மட்டுமே பணியில் அமர்த்தியிருந்தனர்.
இனிவரும் நாட்களிலாவது பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப, போக்குவரத்தை சரிசெய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும்.நான் விடுமுறையில் இருக்கிறேன்!இது குறித்து அறநிலையத்துறை துணை ஆணையர்(பொ) மேனகாவிடம் கேட்டதற்கு, நான் சில நாட்களாக விடுமுறையில் உள்ளேன். போக்குவரத்து நெரிசல் குறித்து, பணிக்கு திரும்பியவுடன் விசாரித்து, இனி வரும் காலங்களில் இது போன்று நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.