பதிவு செய்த நாள்
24
டிச
2018
03:12
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.
டிச.,14 ல் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. தினசரி அதிகாலையில் திருவெம்பாவை வாசிக்கப்பட்டு, நடராஜர் பிரகாரம் வலம் வந்தார். நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை 4:00 மணிக்கு நடராஜபெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
காலை 9:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் நடராஜர் பல்லக்கிலும் -அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. ராஜகோபுரம் முன்பாக அம்பாளுக்கு ஊடல் நிவர்த்தி வரலாறு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் சொத்தை அம்பாளுக்கு அளிப்பதாக நடராஜர் பெருமாள் உறி படிக்கும் வைபவம் நடந்தது.
* திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் முடிந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. தெடார்ந்து நடராஜர் மண்டபத்தில் மூலவர், சிவகாமி அம்மன், நந்திபெருமான், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாணிக்கவாசகர் முதல் பிரகாரம் வலம் வந்தார்.
திருநாள் மண்டபத்தில் நடராஜர், அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி, -அம்பாள் திருவீதி உலாவை ஐந்து கோயில் தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார்.