பதிவு செய்த நாள்
24
டிச
2018
03:12
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாதிரை ஆருத்ரா தரிசனவிழாவை முன்னிட்டு, டிச.,14ல் சாயரட்சை பூஜைக்குபின் பெரியநாயகியம்மன், சிவன், மாணிக்கவாசகர், நடராஜருக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதன்பின் அம்மன், மாணிக்கவாசகர் எதிரே வைத்து ஓதுவார்கள் திருவெண்பாவை பாடினர். நேற்றுமுன்தினம் இரவு ஆருத்ரா அபிஷேகம், அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று (டிசம்., 24ல்) திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு நடராஜர் ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. நடராஜர், சிவகாமியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுவாமிகள், நான்குரத வீதிகளில் உலா வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன் அருள் பாலித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் செய்தனர்.
* நத்தம்: நத்தம் அருகே கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அதிகாலையில் உலக நன்மை வேண்டி பல்வேறு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து கும்பங்கள் வைத்து சிவ பூஜை நடத்தப்பட்டது. நடராஜர் சுவாமி, சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர், மஞ்சள் நீர், குங்குமம், புஷ்பம் 16 வகை அபிஷேகங்கள் நடந்தன.
கோ பூஜையை தொடர்ந்து மங்கள புஷ்பார்ச்சனை, சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை பாடியதையடுத்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வீதி உலா சென்றார். சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
* வடமதுரை: வடமதுரை திருச்சி ரோட்டிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுந்தரேசுவரர், சிவபெருமாள், நடராஜருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளை அர்ச்சகர்கள் ஐயப்பன், நாராயணன் செய்தனர். ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் நாராயணி மற்றும் பொதுமக்களும் செய்திருந்தனர்.