பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று (டிசம்., 23ல்), ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கம்பத்திற்கு ஊற்றி, அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம், மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த, 18ல் இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து கோவில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள், பெண்கள், தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று வீரப்பன்சத்திரம் பகுதி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், தனித்தனிக் குழுவாக வைராபளையம், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவிலை அடைந்து, அங்கு, கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்த பாதையான, வைராபாளையம் நால்ரோடு, அசோகபுரம், சத்திரோடு, உள்ளிட்ட சாலைகளில், தீர்த்த ஊர்வலம் வருவதற்கேற்ப வாகன போக்குவரத்தை போலீசார் மாற்றம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்த காரணத்தால், பிக்பாக்கெட், ஜேப்படி நபர்களை, தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்து வந்தனர்.