பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
சபரிமலை: மகரவிளக்கு கால சீசன் முடியும் வரை, சபரிமலைக்கு, பெண்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில், மாநில அரசு தீவிரமாக உள்ளது.
சபரிமலையில் போலீஸ் குவிக்கப்பட்டு,144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் பக்தர் கூட்டம் குறைந்தது.கடந்த இரு நாட்களாக கூட்டம் அதிகரித்த நிலையில், தமிழகம் மற்றும் கேரள பெண்கள் வந்தது, பதட்டத்தை ஏற்படுத்தியது.
வரவேண்டாம்: இந்நிலையில், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார்பத்தனந்திட்டையில் கூறியதாவது:பெண்கள் வருவதால் சபரிமலையில் மோதல் சூழல் உருவாகிறது. வரும் பெண்கள் உண்மையான பக்தர்களா என்று முடிவு செய்ய இயலாத நிலை உள்ளது.
பிரச்னை ஏற்படுத்தவே பெண்கள் வருவதாக தெரிகிறது. உண்மையான பெண் பக்தர்கள் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வரவேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, சபரி மலையில் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள், தற்போது பெண்கள் வந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என, டி.ஜி.பி.,க்கு அறிக்கை அளித்து உள்ளனர்.