பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று (டிச.,26) நடக்கும் சுவாமி- புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆரியன்காவு விழாக்கோலம் பூண்டது. விழாவை முன்னிட்டு ராஜகொட்டாரத்தில் "பாண்டியன் முடிப்பு எனும் நிச்சய தார்த்தம் நேற்று (டிசம்., 25ல்) இரவு 7:00 மணிக்கு நடந்தது.
அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா, சவுராஷ்டிரா சமூக தேவியை மணந்து கொண்டதாக ஐதீகம். ஆண்டு தோறும் இந்த திருமண விழாவை கொண்டாட "ஆரியன் காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவிதாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டார் சம்பந்தியாக அழைத்து கவுரவிக்கின்றனர். இரு வீட்டார் இணைந்து திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) மாம்பழத் துறையில் எழுந்தருளியுள்ள புஷ்கலாதேவி கோயிலில் அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் மாம்பழத்துறையில் இருந்து மேளதாளம் முழங்க ஆரியன்காவுக்கு அழைத்து வந்தனர். தர்மசாஸ்தா கோயில் கருவறையில் ஐயனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் அற்புதம் நடந்தது.
"பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயார்த்தத்தை முன்னிட்டு நேற்று (டிசம்., 25ல்) மாலை 5:00 மணிக்கு கேரள, தமிழக பக்தர்கள் சார்பில் மாப்பிள்ளை அழைப்பு எனும் "தாலப்பொலி ஊர்வலம் நடந்தது. கோயில் ராஜகொட்டாரத்தில் மாலை 6:45 மணிக்கு நிச்சயதார்த்த பூஜைகள் துவங்கின.
பொதுக்காரியதரிசி எஸ்.ஜெ. ராஜன் நிச்சயதார்த்த உரை நிகழ்த்த சுவாமி சார்பில் கோயில் உதவி கமிஷனர் சிபு, அம்பாள் சார்பில் சங்க தலைவர் கே.ஆர். ராகவன் ஆகியோர் நிச்சயதார்த்த வெற்றிலை, பாக்கு மாற்றி கொண்டனர். இருவருக்கும் மாலை, வஸ்திரங்கள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, மதுரை எம்.எல்.ஏ. சரவணன், சங்க நிர்வாகிகள் சாந்தாராம், மோகன், ஹரிஹரன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (டிசம்., 26) இரவு 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.