பதிவு செய்த நாள்
02
ஜன
2019
03:01
பல்லடம்:பாத யாத்திரை செல்ல வசதியாக, நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என, பல்லடத்தில் முருக பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தைப்பூச விழாவை முன்னிட்டு,
லட்சக்கணக்கான பக்தர்கள், பழநிக்கு பாத யாத்திரை செல்கின்றனர். குறிப்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.அவ்வாறு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தனி நடைபாதை அமைக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து, பல்லடம் வட்டார முருக பக்தர் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும், பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த, ஆயிரக்கணக் கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.
அவ்வாறு, பல்லடம் - தாராபுரம் வழியாக பழனி செல்லும் ரோடு, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.பஸ், லாரி, கண்டெய்னர், வேன், கார் என, தினமும் பலஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வரும் தாராபுரம் ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறுகலாக இருக்கும் தாராபுரம் ரோட்டில், முட்கள், பாட்டில் உள்ளிட்டவை ரோட்டோரத்தில் கிடப்பதால், பக்தர்கள் ரோட்டுக்கு வருகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ரோட்டை விரிவுபடுத்தி, இருபுறமும், நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.ஆனால், இதுகுறித்து யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, தைப்பூசத்துக்கு முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.