பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் அருளாசியுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 02:01
" கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய முதல் வேதம் - தமிழ் மறை - பிரணவ வேதம். அதுவே - அந்தத் தமிழ் மறையே தொன்மையானது . வேதங்களுக்கெல்லாம் முற்பட்டது. அந்தத் தமிழ் மறைதான் " ஓம் " . நான்கு வேதங்களுக்கும் முன் தோன்றிய மூத்த வேதம். அதனால்தான் பிரணவ வேதம் என்கிறோம். "அயம் " - நான். அது பிரம்மம். அது ஆத்மா. மனிதனிடத்தில் எது ஆத்மாவோ அது பிரம்மம். அது மெய்யணர்வு.
அம்மெய்யுணர்வாக நீ இருக்கிறாய். இந்தப் பிரபஞ்சத்தின் மூலப் பொருள் அதுவே. " என இருபத்தொன்பதாவது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் ஜெகத்குரு மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் நல்லருளாசி வழங்கி உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் விளக்குகையில் ரிக் - யஜீர் - சாம வேதங்கள் முதலில் தோன்றின. பின்னர் அதர்வன வேதம் தோன்றியது. எல்லோருக்கும் தெரிந்த இந்த மகா வாக்கியங்கள் நான்கு எனப் பறை சாற்றப்படுகின்றன. இவை சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டன. இவற்றிற்கு விளக்கம் அளிக்க வேதாந்தங்கள் - உபநிடதங்கள் - கீதை - ஸ்மிருதிகள் தோன்றின. இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபந்யாசங்கள் எழுந்தன என்றார்.
முன்னதாக ஜோதிப் பிழம்பாய் - சுக வடிவாய் - ஞானக் கருவூலமாய் பிரணவாலயத் தவக் குடிலிலிருந்து குருமாதா பூரண கும்பத்தோடு வரவேற்க - மூத்த ஞானாசிரியப் பெருமக்கள் இருமருங்கிலுமிருந்தும் மலர் தூவித் தொழ - அறங்காவலர் புடை சூழ - மங்கல வாத்தியங்கள் முழங்க விழா மேடைக்கு குருமகான் அழைத்து வரப்பட்டார். விழா மேடையில் அவர்தம் தமக்கை சுசீலா அம்மையாரிடமிருந்து பால் குவளை பெற்றுப் பால் அருந்தி வேள்வியை நிறைவு செய்தார் குருமகான். அரங்கம் நிரம்பி வழிந்த உலகெங்குமிருந்தும் வந்திருந்த மெய்யுணர்வாளர்கள் " குருமகான் வாழ்க " என எழுப்பிய முழக்கம் மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்த்து அலை பல வினாடிகள் நீடித்தன. தாய்ப் பசுவைக் கண்ட கன்று போல சீடர்கள் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி மெய் மறந்து வாழ்த்தியதைக் காண முடிந்தது.
எல்லாம் சரியாகும்: மகரிஷி தமது வாழ்த்துரையில் கடந்த ஆண்டு நடந்த ஆண்டாக நகர்ந்து விட்டது. நிகழும் ஆண்டில் எல்லாம் சரியாகும். பஞ்ச பூதங்கள் சரியாகும் - உயிர்கள் இணக்கம் பெறும் - மக்களின் உடல் நிலை - மன நிலை - அறிவு நிலை - சமுதாய நிலை - பொருளாதார நிலை சரியாகும் ஏன் ? அரசியல் நிலையும் சரியாகும். பக்தி நிலை - ஆன்மிக நிலை சரியாகும் . உலக நிலை சரியாகும். சாதி மத இன - மொழி - நிற - தேசப் பிரச்சினை சரியாகும் . சூரிய சக்தியை நன்கு பயன்படுத்தும் காலம் அமையும் . மனித சக்தியை நன்மைக்காகவே பயன்படுத்தும் நிலை தோன்றும் சுருங்கக் கூறின் பிரபஞ்சம் சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் பெற்று சத்திய யுகம் தோன்றும் என வாழ்த்தி - அனைவரையும் தனித்தனியே ஆசிர்வதித்தார்.
சமதர்ம இறையாட்சி: விழா ஆலய மரபுப்படி ஒரு நிமிட அமைதியோடு தொடங்கியது. முதலில் குரு கீதம் - தேசிய கீதம் - தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஞான கீத்தை உருக்கத்தோடு சத்யா பாடினார். சென்னை உலக சமாதான ஆலயத்தினரின் பிரணவ வேதப் பாடல் இசை அனைவரையும் ஈர்த்தது. ஏ.பாலசுப்பிரமணியம் திருமூலர் திருமந்திரப் பாடல் பாடினார்.
அஷ்ட தீபம் - சமதர்ம இறையாட்சி: பாரத மாதா மூவர்ணக் கொடியோடு குருமாதாவை அழைத்து வர - வள்ளற்பெருமான் - அண்ணல் விவேகானந்தர் - ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் - தேசப் பிதா காந்தியடிகள் - இயேசு பிரான் - நபிகள் நாயகம் - பசிப்பிணி மருத்துவர் விவசாயக் கடவுள் புடை சூழ சமதர்ம இறையாட்சி மலர்ந்திட்ட வெளிப்பாட்டை உணர்த்தும் வண்ணம் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தொடர்ந்து சர்வ சக்தி சித்தி மகா யக்ஞம் - பொதுச் செயலாளர் கே.எஸ். சுந்தரராமன் வழி நடத்திட இயற்றப்பட்டது. தொடர்ந்து 29 ஆவது மகா தவ வேள்வி தொடக்க விழாக் காணொளி வெளியீடு கண்டது. தலைமை ஏற்ற அறங்காவலர் கே.விநாயகம் வெளியிட சிங்கப்பூர் உலக சமாதான ஆலயக் கிளைத் தலைவர் லட்சுமணதாஸ் பெற்றுக் கொண்டார். தீர்வுகளின் திறவு கோல் எனும் ராஜா ஆத்மமயன் எழுதிய நூலினை விழாத் தலைவர் பி.விஸ்வநாதன் வெளியிட முதல் பிரதியை மலேசியா டாக்டர் சரசிஜெம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் அன்பிற்கினியாள் பரத நாட்டியம் சுவை கூட்டியது. ஸ்ரீ பரஞ்ஜோதி யோகாக் கல்லூரி மாணவர்கள் யோகா செய்து காட்டி அசத்தினர். யோகா கல்லூரி முதல்வர் ஸ்ரீகுமார் கல்லூரி செயல்பாடுகளை விளக்கியதோடு இவ்வாண்டு மாநில அளவிலான யோகா போட்டி இக்கல்லூரியில் நடைபெறவிருப்பதாகவும் - மாநில அளவில் விருதுகளைப் பெற்றதைப் போலவே இக்கல்லூரி மாணவர்கள் இப்போட்டியிலும் விருதுகளைக் குவிப்பர் என அறிவித்தார். அகதாரணா செய்முறையை மெய்ஞானச் செல்வி சத்யா அசுர வேகத்தில் செய்து மலைக்க வைத்தார். ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி இயக்குனர் ( கல்வி ) கே.புனிதவள்ளி நிகழ்வினை நெறிப்படுத்தனார்.
ஆர்.சத்யா மணிவண்ணன் வரவேற்க, கோவை உலக சமாதான ஆலய மெய்ஞான ஆசிரியர் கே. கண்ணன் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது. குருமகானின் தமிழக சீடர்களோடு மலேசியா - சிங்கப்பூர் - கனடா - ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பெருந் திரளானோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.