பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
சென்னை: தமிழகம் முழுவதும், நாளை காணும் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரை உள்பட சுற்றுலா தலங்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டு பொங்கலும், நாளை, காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் நாளில், பொதுமக்கள், தங்கள் உறவினர் வீடுகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று, பொழுதுபோக்குவர்.சென்னையில், மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, வண்டலுார் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, அரசின் தொழில் பொருட்காட்சி, பொழுது போக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள் என, பல இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவர். மேலும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள், தனியார் இசை நிகழ்ச்சிகளிலும் மக்கள் கூடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல், சமூக விரோதிகளின் குற்ற செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மெரினா கடற்கரைக்கு, நாளை இரண்டு லட்சம் பேரும், எலியட்ஸ் கடற்கரைக்கு, 50 ஆயிரம் பேரும், செல்ல வாய்ப்புள்ளது. அதனால், 20 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குதிரை படை, கடற்கரை ரோந்து வாகனம் போன்றவற்றிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுலா தலங்கள், அருவிகள், ஆறுகளின் குளிக்கும் பகுதிகள், விளையாட்டு மற்றும் சிறுவர் பூங்காக்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆள் இல்லா குட்டி விமானம் வழியாக, கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.