பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
ராமேஸ்வரம்: பொங்கல் விழா யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பொங்கல் திருநாள் யொட்டி, அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் நடை திறந்து, காலை 4 முதல் 5 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
இதனைதொடர்ந்து கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் 22 தீர்த்தங்களை நீராடினர். பின் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் மேலாளர் சுந்தரவாத்தியார், பஜ்ரங்கதாஸ் பாபா சேவா மடத்தில் சீதாராம்தாஸ்பாபா ஏராளமான பக்தருக்கு இனிப்பு பொங்கல் வழங்கினர்.
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் சன்னதியில் உள்ள பட்டாபிஷேக ராமர், தர்ப்ப சயன ராமர், கல்யாண ஜெகநாதப்பெருமாள் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மஞ்ச மாதாவிற்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.உலகநன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது.
* சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கலிட்டு வழிபாடு நடந்தது.