மேட்டுப்பாளையம்: காரமடை அருகே குருந்தமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் தைப்பூசத்தேர் திருவிழா நேற்று துவங்கியது. மதியம், 12:30 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிக்கம்பத்தில் சேவல் உருவம் போட்ட கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, கோஷம் போட்டனர்.வரும் 19ம் தேதி இரவு வள்ளி மலையிலிருந்து அம்மன் சுவாமியை அழைத்து வருதலும், 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 21ம் தேதி காலை, வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.வரும் 22ல் பரிவேட்டையும், 23ல் இரவு தெப்பத் திருவிழாவும், 24ம் தேதி விழா நிறைவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.