பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகில், கணியூர் ஊராட்சியில் உள்ளது ஊஞ்சப்பாளையம் கிராமம். இங்கிருந்து ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு, ஒரு பகுதியினர் பழநிக்கும், மீதிப்பேர் சென்னிமலை முருகன் கோவிலுக்கும் காவடி எடுத்து ஆடியபடி பாதயாத்திரை செல்வது வழக்கம்.
நூறாண்டாகத் தொடரும் இந்த பாரம்பரியப்படி, நேற்று முன்தினம் (ஜன., 19ல்) ஊஞ்சப் பாளையத்திலிருந்து, கந்தசாமி அய்யன் குடும்பத்தை சேர்ந்த பெரியகாவடி முன்செல்ல, பாதயாத்திரை குழுவினர் அணிவகுத்தனர்.
கடும் விரதமிருந்து, கால்கள் நோகாமல் இருப்பதற்காக வழிநடைப் பாடல்களைப் பாடியபாடி, காவடி எடுத்து ஆடிப்பாடி நூற்றுக்கணக்கானோர் சோமனூர், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், மங்கலம் வழியாக சென்றனர்.இந்த பாதயாத்திரை பக்தர்கள் குழுவில் டம்பெற்ற சிறுவர்கள், சோமனூர் பவர்ஹவுஸ் முன், காவடிச்சிந்து பாடல்களைப் பாடியபடி ஆடிய காவடி ஆட்டம் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.
இவர்கள் (ஜன., 20ல்) நேற்று மாலை சென்னிமலையை அடைந்தனர். அங்கு சிரகிரிவேலவன் சன்னதியில் காவடிகளை செலுத்தினர். இன்று (ஜன., 21ல்) தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்ற பின், ஊர் திரும்புவர்.கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் மோளகாளிபாளையம், வலைய பாளையம், மாதப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து தைப்பூசத்திருவிழா விற்காக, பழநிக்கும், சென்னிமலைக்கும் கடந்த மூன்று நாட்களாக சாரிசாரியாக பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.