தஞ்சாவூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் திருக்காட்டுப்பள்ளி உள்ளது. காவிரியாற்றின் தென்கரையில் உள்ள இத்தலத்தை கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர். அக்னிதேவன் திருக்காட்டுப்பள்ளியில் வழிபாட்டுக்காக குளம் வெட்டி தீர்த்தம் எடுத்து சிவபூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. சுவாமிக்கு அக்னீஸ்வரர் என்றும், தீயாடியப்பர் என்றும் பெயர். அம்பிகைக்கு சவுந்தர்யநாயகி என்பது திருநாமம். மாசி மகத்தன்று இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் இருக்கும் நாகாச்சி கிராமத்துக்கு சுவாமியும், அம்பாளும் செல்வர். நாகன் என்ற சிற்றரசன் கொள்ளிடத்தின் ஓடத்துறையான நாகாச்சியை ஆட்சி செய்ததாகவும், அவனே சவுந்தர்யநாயகி சிலையை வழிபாட்டுக்கு செய்து கொடுத்ததாகவும் கூறுவர். அதனால் நாகாச்சி கிராமம், அம்மனின் பிறந்தவீடாகக் கருதப்படுகிறது. அம்பாளை அவ்வூர் மக்கள் தங்கள் மகளாய் கருதுகின்றனர். பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு சீதனமும், கட்டுச்சோறும் கொடுத்து புகுந்த வீடான திருக்காட்டுப்பள்ளிக்கு அனுப்பி வைப்பர். செல்லும் வழியில் தங்கள் மகளுக்கு பசித்தால் சாப்பிடட்டுமே என்பதற்காக இந்தக் கட்டுச்சோறு தரப்படுகிறது. அன்பை வெளிப்படுத்த இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!