பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
திருச்சி: திருச்சி, குமார வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று (ஜன., 21ல்) தைப்பூச திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று (ஜன., 21ல்) காலை, 5:00 மணிக்கு, முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி, உய்யக் கொண்டான் வாய்க்காலில், தீர்த்தவாரி கண்டார். அங்குள்ள மண்டபத்தில்
எழுந்தருளியபின், மாலையில் சுவாமி கோவிலை வந்தடைந்தார்.
இரவு, வயலூர் வழியாக, வரகாந்திடலுக்கு சென்ற சுவாமி அங்கு மண்டகப்படி பெற்றார். அதன் பின், கீழ் வயலூர் தைப்பூச மண்டபம் சென்று, வடகாத்தூரில் தங்கினார்.
இன்று (ஜன., 21ல்) காலை, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழிங்கநல்லூர் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்து மாரியம்மன் சுவாமிகளுடன் சந்திப்பு நடக்கிறது. தொடர்ந்து, ஐந்து சுவாமிகளின் திருவீதி உலா, அதவத்தூர் மண்டபத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
விழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி
ஆணையர் ராணி ஆகியோர் செய்திருந்தனர்.