பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜரின், 172வது ஆண்டு ஆராதனை விழா நேற்று 21ல், துவங்கியது.
தஞ்சாவூர், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின், 172வது ஆராதனை விழா நேற்று மாலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. அறங்காவலர் குழுத்தலைவர் வாசன் தலைமை வகித்தார்.
பத்மபூஷன் கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்து பேசியதாவது: சிறு வயது முதல், நான் தியாகராஜரின் பஞ்ச ரத்தின கீர்த்தனகளை பாடியும், அவரை தரிசித்தும்
வருகிறேன். லயத்தின் மூலம், இசையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் தியாகராஜர். முன்பு வார்த்தைகள் புரியாத அளவில் இருந்தது. அதை எளிமைப்படுத்தி, சங்கீதமாக புரியும்படி, பாடல்களாக உருவாக்கியவர் தியாகராஜர். ஒவ்வொரு கீர்த்தனையும் எவ்வாறு இறைவனை புகழ்ந்து பாடலாம் எனவும், அதை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு அவரது பாடல்கள் உள்ளது.
சங்கீதத்தால் மேன்மை அடைய முடியும் என, அவருடை பாடல்கள் இன்றளவும் உள்ளது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து,
உலகமெங்கும் இசையால் எப்படி இறைவனை அடையாலம் என, இசையின் மூலம் வெளிப்படுத்தியவர். ராமபிரானை அதிகமாக பாடியுள்ளார். இந்த இடத்திலே அவருடைய ஆராதனை ஆனது, 172வது ஆண்டாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள
இசைக் கல்லூரியில், அவரது பெயரில் இருக்கை அமைத்து, இன்னும் விரிவடைந்து, ஆராய்ச்சிகள் பல உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணன், சிக்கல் குருசரண், சந்திப் நாராயணன், பாபநாசம்
அசோக் ரமணி, ராஜேஷ் வைத்யா வீணை உட்பட, 13 இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான, இன்று 22ல், 62 இன்னிசை நிகழ்ச்சிகளும், நாளை, 60 இன்னிசை நிகழ்ச்சிகளும், 24ம் தேதி, 62 இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. நிறைவு நாளான, 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, தியாகராஜரின் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் விழா பந்தலுக்கு எடுத்துவரப்படும். பின்,காலை, 9:00 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று, ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். அதை தொடர்ந்து அன்று இரவு, 11:00 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.