இளைஞன் ஒருவன் காட்டில் நடந்து சென்றான். அவனுக்குப் பசித்தது. மரம் ஒன்றில் பழங்கள் இருப்பதைக் கண்டு, மேலே ஏறி பறிக்க முயன்ற போது, பாரம் தாங்காமல் கிளை முறிந்தது. சுதாரித்த அவன் கீழிருந்த ஒரு கிளையைப் பிடித்து தொங்கினான். குனிந்து பார்த்தான்; உயரத்தில் இருப்பது புரிந்தது. கண்களை மூடியபடி, ”கடவுளே என்னை காப்பாற்று ” என அலறினான். முதியவர் வடிவில் வந்த கடவுள், இளைஞனைப் பார்த்தார். அவன் மீது சிறுகல்லை வீசினார். கல் பட்டதும் வலியில் கீழே பார்த்தான்; கோபம் வந்தது. ”பெரியவரே, உதவிக்கு அழைத்தால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” எனக் கேட்டான். மீண்டும் ஒரு சிறுகல்லை வீசினார். மேலும் கோபமுற்ற அவன், ”நான் கீழே வந்தால் சும்மா விட மாட்டேன்” என எச்சரித்தான். முதியவர் மேலும் ஒரு கல்லை வீசினார். இளைஞன் விடாமுயற்சியால், இறங்கியதும் முதியவரை நோக்கி வந்தான். ”உதவி தானே கேட்டேன்; கல்லெறிந்து உபத்திரவம் செய்கிறீரே!” என்றான். அமைதியாக சிரித்த முதியவர்,”தம்பி... நான் உனக்கு உதவி தான் செய்தேன்” என்றார். இளைஞனுக்கு புரியவில்லை. ”நான் உன்னை பார்த்த போது பயத்தில் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. கல்லை விட்டு எறிந்ததும் பயம் விலகியதுடன், என் மீதிருந்த கோபத்தால் யோசிக்க ஆரம்பித்தாய். அதன் பின் முயற்சியில் இறங்கி, வெற்றியும் பெற்றாய். பயத்தை போக்கவே, கல்லெறிந்தேன்‘ எனச் சொல்லி விட்டு மறைந்தார் முதியவர்.