பதிவு செய்த நாள்
05
பிப்
2019
11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், வெள்ளி மயில் வாகனம், முறையாக பராமரிக்கப்படாததால், கறுப்பாக மாறி விட்டது. இதில், நேற்று முருக கடவுள் உலா வந்ததை பார்த்த பக்தர்கள், வேதனை அடைந்தனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா நாட்களில், சுவாமி, அம்மன், ஸ்ரீ ராமர், முருகன், பஞ்சமூர்த்திகள், தங்கம் மற்றும் வெள்ளி வாகனத்தில் வீதி உலா வருவர். தை, ஆடி அமாவாசை அன்று சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் வாகனத்தில், அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி, தீர்த்தவாரி வழங்குவர்.
வீதி உலா வரும் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்களை, கோவில் நிர்வாகம் பராமரித்து, பாலீஷ் செய்யவில்லை. இதனால், வெள்ளி மயில், மூஞ்சுறு வாகனங்கள், கறுப்பாக மாறி விட்டன. தை அமாவாசையான நேற்று, கோவிலில் இருந்து, முருகன், வள்ளி, தெய்வானையுடன், கருப்பு நிறத்தில் இருந்த வெள்ளி மயில் வாகனத்தில், அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளியதை பார்த்த பக்தர்கள், வேதனை அடைந்தனர். கோவிலின் மாத உண்டியல் வருவாய், 50 லட்சம் ரூபாயை தாண்டிய நிலையில், வெள்ளி வாகனத்தை புதுப்பிக்க, சில ஆயிரம் ரூபாய் நிதி இல்லையா அல்லது மனம் இல்லையா என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.