வீரராகவர் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம்
பதிவு செய்த நாள்
05
பிப் 2019 12:02
திருவள்ளூர்: தை அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டனர்.ஆடி, புரட்டாசி மற்றும் தைச அமாவாசை தினங்களில், இந்துக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு முதலே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அன்றிரவு, கோவில் வளாகத்தில் தங்கியிருந்த அவர்கள், நேற்று அதிகாலை, ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடினர். பின், குளக்கரையில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம், திதி அளித்து, வழிபட்டனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவரை தரிசனம் செய்தனர்.நேற்று, பகலில், ரத்னாங்கி சேவையிலும், மதியம், நாச்சியார் திருக்கோலத்திலும், உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தை பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான நேற்று இரவு, உற்சவர் வீரராகவர், யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.
|