திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுப்பது விசேஷம் என கருதப்படுகிறது. தை, ஆடி, புரட்டாசி, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க வருவதுண்டு. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 5:00 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் குவிந்தனர்.
கொட்டகை அமைக்கப்பட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் ஓரளவிற்கு நீரோட்டம் இருந்தது. பக்தர்கள் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பண பொருட்களை கரைத்து வழிபட்ட பின் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஆற்றில் நீரோட்டம் இருந்ததால் மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மானாமதுரை: மானாமதுரை அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையைமுன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது. கோயில் முன் கிராமத்தினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.மானாமதுரை அருகேயுள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன், காசிவிஸ்வநாதர் கோயிலில் மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துதங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டனர்.சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.