சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவர் தியாகராஜர். இவரையே தம்முடைய குருவாகவும், தெய்வமாகவும் எண்ணி வழிபட்டு, திருவையாறிலேயே வாழ்ந்து வந்தவர் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள். இந்த அம்மையாரின் சங்கீத அறிவும், சத்குரு தியாகய்யரிடம் இவருக்கு இருந்த ஈடுபாடும் அசாத்தியமானது. வித்யா சுந்தரி என்றழைக்கப்படும் நாகரத்தினம்மாள். தனது ஒன்பதாவது வயதிலேயே சங்கீதத்திலும் சமஸ்கிருதத்திலும் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவரது ஆற்றலும் திறமையும் அவ்வளவு மதிப்பும் அவரை ஸ்புடம் போட்ட தங்கமாக வெளிப்படுத்தின. காலப்போக்கில் அவருக்கு தியாகராஜ சுவாமிகளிடம் ஏற்பட்ட அபரிமிதமான அன்பிலும் பக்தியிலும் மகானை வழிபடுவது மட்டுமே தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார்.
அம்மையார் செல்வச் செழிப்பிலும் உயர்ந்து விளங்கினார். இந்த நிலையில் பொறாமை கொண்ட அவரது நெருங்கிய உறவினர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியது. இந்த சமயத்தில் நாதபிரம்மம் தியாகராஜ சுவாமிகள் அவரது கனவில் தோன்றினார். அம்மையாரை எச்சரித்தார். இந்தச் செய்தி அந்த அம்மையாரின் உயிலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாகரத்தினம் அம்மையார் பெங்களூரில் இருந்து திருவையாற்றுக்கு வந்துவிட்டார். இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தியாகராஜ சுவாமிகளின் சமாதியைத் தேடிக்கண்டுபிடித்து. அதைப் புனரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஏராளமான பொருட்செலவில் சுவாமிகளின் சமாதியை கலை கொஞ்சும்படி நிர்மாணித்தார். 1925-ம் ஆண்டில் தியாகராஜ சுவாமிகளின் சமாதியைக் கட்டி புனர்நிர்மாணம் செய்து முடித்தார். வெகு விமரிசையாக குடமுழுக்கும் செய்தார்.
பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் இல்லை என்றால் தியாகராயர் சமாதி கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குக் கோயில் எழுந்திருக்காது. இப்போது மார்கழி மாதத்தில் நடைபெற்று வரும். தியாகராஜர் ஆராதனை விழாவும் நடைபெற்றிருக்காது. அவர் தம்முடைய செல்வங்கள் அத்தனையையும் மகான் தியாகராஜருக்காகவே செலவழித்தார். தியாகராஜரின் சமாதியைச் சுற்றிலும் பல நிலங்களை வாங்கி, எதிர்காலத்தில் அவரது புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கு வழி செய்தார். நாகரத்தினம் அம்மையார் 1952 -ம் ஆண்டு மே மாதம் 19 -ம் தேதியன்று வைசாக பஹூள ஏகாதசியன்று மகான் தியாகராஜசுவாமிகளின் திருவடி சேர்ந்தார்.