பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
சென்னை:தென்னிந்தியாவின், முற்கால அக்ரோ பஸ்டோரல் சமூகம் குறித்த கருத்தரங்கு, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நேற்று (பிப்., 10ல்) நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, டெக்கான் கல்லூரி முன்னாள் இயக்குனரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான, பட்டாயா பேசியதாவது:இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி, கி.மு., 500 ஆண்டுகள் வரை உள்ளது.
இக்காலக்கட்டத்தில், புதிய கற்காலம் மற்றும் இரும்பு கால மனிதர்கள், வேளாண்மை மற்றும் மேய்தல் தொழிலை செய்து வந்தனர். இவர்களுடைய பழக்க வழக்கங்கள், வரலாற்று
காலம் வரை தொடர்ந்து வருகிறது.தென்னிந்தியாவில், புதிய கற்காலம், கி.மு., 300 -- 1000 ஆண்டுகளுக்கு, இடைப்பட்ட காலமாக உள்ளது. இது ஏறக்குறைய, சிந்து சமவெளி
காலக்கட்டத்தையொட்டி உள்ளது.
தென்னிந்தியாவின், புதிய கற்கால பண்பாட்டை, கர்நாடகம், ராயலசீமா மற்றும் வடதமிழக பகுதிகளில் பார்க்க முடிகிறது.கர்நாடக மாநிலம், பெல்லாரியில், 1802 -- 03ம் ஆண்டு காலக்கட்டத்தில், மெக்கன்சி என்பவரால், சாமல்மேடு பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டது.
இது போன்ற சாமல்மேடு, இந்தியாவில், 1810 மற்றும் 1880ம் ஆண்டுகளில், இந்தியாவின் கற்கால தந்தை என்று அழைக்கப்படும், ராபர்ட் புரூஸ் என்பவராலும் கண்டுபிடிக்கப்பட்டது.
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர், மார்டிமெர் வீலர், கர்நாடகாவில் உள்ள பிரமகிரி என்ற இடத்தை, அகழாய்வு செய்தார்.தென்னிந்தியாவில், சங்கனக்கல்லு, பிக்லிஹல், மஸ்கி, டெக்கலகோடா, ஹல்லூர் ராமாபுரம், பையம்பாலி மற்றும் பானஅல்லி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த பகுதி மக்களுக்கான வாழ்விடங்கள், மலை பாங்கான இடங்களில் அமைந்துள்ளன.
மக்கள், குடிசைகள் அமைத்து, ஆடு, மாடுகளை மேய்த்த படி, எளிமையான கிராம வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.பார்லி, கேழ்வரகு, கொள்ளு உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு, பொருளாதாரம் ஈட்டினர். காட்டு விலங்குகளை வேட்டையாடியும், வனங்களில் கிடைத்த சிறுதானியங்களை, உணவிற்கு பயன்படுத்தினர்.புதிய கற்கால கருவிகள் மற்றும் அம்மி, குழவி உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர்.சாம்பல் மற்றும் சிவப்பு மண்பாண்டங்களை பயன்படுத்தியதோடு, கல் மற்றும் எலும்பில் செய்யப்பட்ட மணிகளையும் மக்கள் பயன்படுத்தினர்.குழந்தைகள் மற்றும் முதியோர் இறந்த பின், புதைக்க பயன்படுத்தும் ஈம
சின்னங்களையும், அங்கு பார்க்க முடிந்தது. மேலும், ஆடு, மான் உருவங்களை, மக்கள் பாறைகளில் வரைந்து, அவர்களின் கலை உணர்வையும் வெளிப்படுத்தினர்.இவ்வாறு அவர் பேசினார்.