பதிவு செய்த நாள்
29
பிப்
2012
11:02
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று யாக பூஜையுடன் துவங்குகிறது. ஈரோட்டில் பழமையான வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் 2005ல் துவங்கிய திருப்பணி, தற்போது முடிவடைந்து, கும்பாபிஷேகம் மார்ச் 4ம் தேதி நடக்கிறது. முன்னதாக, கோவிலின் பின்புறம் பிரம்மாண்ட வேலைப்பாடுடன் கூடிய யாகசாலையும், சி.என். கல்லூரி மைதானத்தில் அன்னதானப் பந்தலும் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் முளைப்பாரியிடுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, நவதானியங்களை யாகசாலையில் இட்டு வழிபட்டனர். இன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. 3ம் தேதி காலை 8.30க்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. மார்ச் 4ம் தேதி காலை 3 மணிக்கு நான்காம் கால பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காலை 5.15க்கு அனைத்து கோபுரத்துக்கும், மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று ஒரு லட்சத்துக்கும் மேலான பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதனிடையே, பழைய கோவிலில் இருந்த தூரிக் கல்லில், பழங்கால எழுத்துக்கள் இருப்பது தெரியவந்தது. புலவர் ராசு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், பக்தர்களால், கோவிலுக்கு 1819ம் ஆண்டு தூரிக்கல் வேலை செய்தது பற்றிய விபரம் அக்கல்லில் உள்ளது, என்றார்.