ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவின் இறுதியாக மகாமுனி பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி நள்ளிரவு மயான பூஜை; 19ம் தேதி சித்திரத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டத்தில் பூ இறங்குதல் நிகழ்ச்சி, 20ம் தேதி நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல் நடந்தது. ஊர் முழுவதும் மக்கள் மஞ்சள் நீராடி கொண்டாடினர். இரவு, 8:00 மணிக்கு மகாமுனி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மகாமுனி அருள்பாலித்தார்.மகாமுனிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஆனந்த், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் பங்கேற்றனர். நேற்று, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.