தெனாலிராமன் சிறுவனாக இருந்த போது, காளி உபாசனையில் ஈடுபட்டார். ஒருநாள் தியானத்தில் இருந்தபோது, காளியே நேரில் வந்து காட்சி அளித்தாள். என் செல்லக் குழந்தையே! வேண்டும் வரம் தருகிறேன், என்று சொல்லி ஒரு கிண்ணத்தில் பாலும், ஒரு கிண்ணத்தில் தயிரும் கொடுத்து, பாலைக் குடித்தால் நீ அறிவாளியாகத் திகழ்வாய். தயிரைக் குடித்தால் செல்வந்தனாக வாழ்வாய். எதுவேண்டுமோ அதை எடுத்துக் கொள், என்றாள் பாசத்துடன். தெனாலிராமன் அவளிடம்,தேவி! குடிப்பதற்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லி இரண்டையுமே ஒரு நொடியில் குடித்து விட்டார். பின்பு தேவியிடம், மனிதவாழ்விற்கு கல்வியும் செல்வமும் இருகண்கள் அல்லவா! ஒன்றில்லாமல் மற்றொன்று பயன்படாது. அதனால், இரண்டையும் குடித்துவிட்டேன், என்று சொல்லி சிரித்தான். சமயோசித புத்தியுடன் செயல்பட்ட சிறுவனை காளி ஆசிர்வதித்து மறைந்தாள்.